ஜெனீவா: ஐ.நா. மனித உரிமைகள் அவையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிப்பை புறக்கணித்த மோடி அரசின் நிலைப்பாட்டை இலங்கை அரசு பாராட்டியுள்ளது. ஐ.நா.மனித உரிமைகள் அவையில் இந்தியா அளித்த ஆதரவை பாராட்டுவதாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்தனா கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, ‘ஐ.நா. மனித உரிமைகள் அவையில் உள்ள 47 நாடுகளில் 22 நாடுகளே நேர்மையாக நடந்துகொண்டுள்ளன.25 நாடுகள் இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்வில்லை. ஐ.நா.மனித உரிமைகள் அவையில் உள்ள நாடுகளுக்கு இது மிகவும் முக்கியமான செய்தி.மேலும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஒரு அழுத்தத்தை கொடுத்துள்ளன.அந்த நாடுகள் அனைத்திற்கும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்,’ என்றார்.

முன்னதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘ஜெனிவா மாநாட்டில் ஆதரவு அளித்த பஹ்ரைன், இந்தியா, ஜப்பான், நேபாளம், இந்தோனேசியா, லிபியா, சூடான், நமிபியா, காபான், டோகோ, மவுரிடானியா, செனிகள், கேமிரூம், பர்கினா ஃபாசோ ஆகிய நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.இதன் மூலம் இந்தியா இலங்கைக்கு ஆதரவாக நடந்து கொண்டது அப்பட்டமாக அம்பலமாகியுள்ளது.
ஐ.நா.வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா!!
இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் நடந்த உள்நாட்டு போர் 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இப்போரின் போது லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்தது, 20 ஆயிரம் பேர் மாயமாகினர். போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. போர் விதிமுறைகளை மீறி இலங்கை அரசு அப்பட்டமான போர்க்குற்றம் புரிந்ததாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் 46வது மனித உரிமை கவுன்சில் கூட்டத் தொடரில், இலங்கை மனித உரிமைகள் மீறல் தொடர்பாக இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தை நிறைவேற்ற உதவுவதன் மூலம் தமிழ் சமூகத்திற்கு நியாயம் கிடைக்கச் செய்ய முடியும் என்பதால், தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள், அமைப்புகள் வலியுறுத்தின. இந்நிலையில், ஐநா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நேற்று நடந்தது.
இதில், 47 உறுப்பு நாடுகளில் இங்கிலாந்து, பிரான்ஸ், அர்ஜென்டினா, பிரேசில் போன்ற 22 நாடுகள் ஆதரவாக வாக்களித்ததால் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், இலங்கையின் போர்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்படுவது உறுதியாகி உள்ளது. அதே சமயம், இந்த வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் விலகி நின்றன. பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட 11 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல், இந்தியா புறக்கணித்ததன் மூலம் ஈழத்தமிழர்களுக்கு மத்திய அரசு பச்சை துரோகம் செய்திருப்பதாக தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.