பிரித்தானிய தொமிற்கட்சி எம். பி முகமட் யாசின் உடன் சந்திப்பு

இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகாரசபையின் கீழ் (Global Human Rights Sanction Regime) தடை செய்வதற்கு பிரித்தானிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பிரித்தானியாவின் பெட்போர்ட் மற்றும் கெம்ஸ்ரன் (Bedford and Kempston) பிராந்தியத்தின் நாடாளுமன்ற உறுப்பினரான முகமட் யாசின் (Mohammad Yasin) அவர்களுடன் பிரித்தானியாவில் மற்றுமொரு உயர்மட்ட சந்திப்பு ஒன்று இன்று (18.03.2022) பிற்பகல் 4.00 மணியளவில் மெய்நிகர்வழி (Zoom) ஊடாக இடம்பெற்றுள்ளது.
சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளுமான திரு கீத் குலசேகரம் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இந்த முக்கிய சந்திப்பில் தொழில்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் (Tamils for Labour) பணிப்பாளர் திரு சென் கந்தையா> ICPPG யின் பணிப்பாளர் அம்பிகை க செல்வகுமார் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் பலர் கலந்துகொண்டு கருத்துக்களை பரிமாறினர்.
கீத் குலசேகரம் அவர்கள் தனது தலைமை உரையின் போது, ஈழத்தமிமர்களின் வரலாற்றினை சுருக்கமாக விவரிக்கும் போது பிரித்தானிய காலணித்துவ ஆட்சிக்கு முன்னர் இரு இராசதானிகளாக இருந்த நாட்டை பிரித்தானியா ஒற்றை ஆட்சிக்குள் கொண்டு வந்து பெரும்பான்மை இனமான சிங்கள தலைவர்களின் கைகளிற்கு இலங்கையின் அரசியல் அதிகாரம் கைமாறப்பட்டமையை சுட்டிக்காட்டினார். அன்று முதல் இன்று வரை இலங்கை அரசு தமிழர்களிற்கெதிராக தனது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகளை தொடர்ந்தும் நடத்தி வருகின்றது எனவும் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடை செய்ய போதுமான ஆதாரங்களை ஏற்கனவே ITJP சமர்ப்பித்திருந்த போதும், பிரித்தானிய வெளிவிவகார அமைப்பு இன்னும் உரிய நடவடிக்கை எடுக்க தவறியிருப்பதனை சுட்டிக்காட்டினார். அத்துடன் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மட்டுமன்றி, தற்போது இலங்கையில் தொடரும் ஆள் கடத்தல் மற்றும் சித்திரவதைகளும் சவேந்திர சில்வாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆயுத படைகளே மேற்கொண்டுவருவதால் அதற்கும் சவேந்திர சில்வாவே பொறுப்பு எனவும் தெரிவித்தார். வரலாற்று ரீதியாக மட்டுமல்ல இறுதியுத்தத்தின் போது பிரித்தானியா இலங்கை அரசிற்கு ஆயுத ரீதியாகவும் இராணுவப்பயிற்சிகளையும் வழங்கி தமிழர்களிற் எதிராக இழைக்கப்பட்ட மற்றும் தொடரும் இனப்படுகொலைகளிற்கு காரணமாக இருந்தமையால் பிரித்தானியா பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டிய கடப்பாடு உள்ளதெனவும் மேலும் தெரிவித்தார். அத்துடன் தங்கள் தொகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடை செய்யக்கோரி FCDO விற்கு அழுத்தம் கொடுக்கும் படியும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து உரையாற்றிய சென் கந்தையா அவர்கள், இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடை செய்வதற்கு அனுப்பிய கோரிக்கைகளிற்கு சரியான பதிலை FCDO தராதது வருத்தத்தைத் தருவதுடன், அமெரிக்கா தடை செய்த பின்னும் பிரித்தானியா இதுவரை தடைசெய்வதற்குரிய எதுவித முயற்சியும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும் பிரித்தானிய பொருளாதாரத்தில் தமிழர் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும், அவர்கள் கோரிக்கைக்கு செவிமடுக்க வேண்டிய அவசியத்தையும் எடுத்துரைத்தார்.
திருமதி அம்பிகை க செல்வகுமார் தனது உரையின் போது தாம் மீண்டும் மீண்டும் FCDO இனை தொடர்பு கொண்டு சந்திப்பிற்கு கோரிக்கை விடுத்தும் உரிய பதில் கிடைக்காததினை சுட்டிக்காட்டியதுடன் தங்கள் தொகுதியிலுள்ள பாதிக்கப்பட்டவர்களை வெளிவிவகார அமைச்சர் நேரில் சந்திக்க ஏற்பாடு செய்து தரும்படியும் கேட்டுக்கொண்டார்.
மேற்படி சந்திப்பில் சித்திரவதையில் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களான சோமலிங்கம் மகாலிங்கம், கனிஸ்டன் விமலதாசன் மற்றும் கிறிஸ்ரி நிலானி காண்டீபன் ஆகியோரும் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியதுடன் FCDO விற்கு தங்கள் தொகுதியிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் சார்பில் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினை தடை செய்யக்கோரி அழுத்தம் கொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.