இலங்கை உள்நாட்டுப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்நாட்டு அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் 22க்கு 11 எனும் அடிப்படையில் நிறைவேறியது.
இந்தியா, ஜப்பான், இந்தோனீசியா உள்ளிட்ட 14 நாடுகள் இந்தத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. சீனா, பாகிஸ்தான், ரஷ்யா,பங்களாதேஷ், உள்ளிட்ட 11 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன.
இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் தவிர்த்த செயல்பாட்டை, தமிழக கட்சிகளான திமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டவை விமர்சித்துள்ளன.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன். ஆனால், இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்து நழுவியுள்ளது இந்திய அரசு. ஈழத் தமிழர்களுக்கு விரோதமான பாஜக அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”
மத்திய அரசு முறையான விளக்கம் எதையும் சொல்லவில்லை. ஐ.நா. மனித உரிமை மன்றத்திலாவது ஈழத் தமிழர்க்கு ஆதரவான நிலைப்பாட்டை மோடி அரசு எடுக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், உலகத் தமிழர்களை ஏமாற்றிவிட்டது மோதி அரசு. இன்றைய தினம் நடந்த வாக்கெடுப்பில் இந்திய அரசின் பிரதிநிதி பங்கெடுக்கவில்லை. இது ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத மாபெரும் பச்சைத் துரோகம்” என்று கூறியுள்ளார்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ “இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு, ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தியது போர்க் குற்றம் அல்ல, அப்பட்டமான இனப்படுகொலை. ஒரு இலட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. 2009 தொடக்கத்தில், தமிழர்களை பட்டினி போட்டு கொன்றது இலங்கை அரசு.”
இதுகுறித்து, சர்வதேச சமுதாயம் தன் கடமையில் தவறியது. எனினும், அண்மையில் பிரிட்டன், ஜெர்மனி, கனடா, வடக்கு மாசிடோனியா, மாண்டினிரோ, மலாவி ஆகிய ஆறு நாடுகள் இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவந்தன. இந்திய அரசு, இலங்கையை ஆதரிக்கும் என்று இலங்கை வெளிவிவகாரத்துறைச் செயலாளர் ஜெயநாத் கொலம்பிகே நான்கு நாட்களுக்கு முன்பு கூறினார். அதேபோல இன்று, இந்திய அரசின் பிரதிநிதி வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் வெளிநடப்புச் செய்தார். இது ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத பச்சை துரோகம் ஆகும்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், “வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்ததன் மூலம் இலங்கையை மறைமுகமாக இந்தியா ஆதரித்திருக்கிறது,” என தெரிவித்துள்ளார்.
ஐநா தீர்மானத்தில் இந்தியா தயக்கம் காட்டியதுஏன்?

இலங்கையின் பிரதான துறைமுகமாக இருக்கும் கொழும்பு துறைமுகத்தை மேம்படுத்த இந்தியாவுடன் இலங்கை ஏற்கனவே ஓர் ஒப்பந்தம் செய்திருந்தது.
ஆனால் அதை இலங்கை துறைமுகங்கள் ஆணையமே மேம்படுத்தும் என்று கூறிய இலங்கை அரசு இந்தியாவுடனான ஒப்பந்தத்தில் இருந்து பிப்ரவரி தொடக்கத்தில் பின்வாங்கியது.
இந்த ஒப்பந்தத்தை மீண்டும் தொடர்வதற்கு இந்தியா முயற்சி செய்து கொண்டுள்ளது. எனவே இலங்கைக்கு எதிராக இந்திய அரசு வாக்களித்தால் இந்த துறைமுகத் திட்டத்தில் பின்னடைவு ஏற்படும் என்று இந்திய அரசு கருதுகிறது.
ராஜபக்ஷ சகோதரர்கள் இலங்கையில் ஆட்சிக்கு வந்தபின் நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசு இலங்கை அரசுடன் நெருக்கம் காட்டி வருகிறது.
இலங்கைக்கு எதிராக வாக்களிப்பது இருநாட்டு வெளியுறவுத் தொடர்புகளிலும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு.