முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மாதம் 18/04-18/05!உலகத் தமிழர் நினைவில் மாறாத சுவடு!

  • HOME
  • NEWS/EVENTS
  • News
  • முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மாதம் 18/04-18/05!உலகத் தமிழர் நினைவில் மாறாத சுவடு!

தனக்குச் சொந்தமான நாட்டை அந்த இனத்திடமிருந்து பறித்து, அவர்களை உரிமைக்கு அந்நியமாக்கியதோடு மட்டுமின்றி, ஓர் இனத்தின் வரலாற்றையும் அவர்களின் வாழ்வியல் தொன்மையையும் அழிப்பது உலகின் உச்சக்கட்டமான இன அழிப்பாகும். தங்களின் உரிமைக்குப் போராடியத் தமிழினத்தை முற்றாக அழித்திட இலங்கை அரசு தமிழினத்திற்கு எதிராக கட்டவிழ்த்த கொடுமைகளும் கொடூரங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. வார்த்தையால் விவரிக்க முடியாது வலி நிறைந்தது.

 
 இன அழிப்பு என்பது, மனிதக் குலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் மிக மோசமான அல்லது கொடூரமான குற்றச் செயலாகும். அரசியல், அரசாட்சி உட்பட ஓர் இனத்தின் ஆளுமையும் அதிகாரமும் மேலோங்கும் நிலையில், அங்கு வாழும் சிறுப்பான்மை இனத்திற்கு எதிரான கொடூரங்களும் கொடுமைகளும் அரங்கேறுவது இயல்பாகி விட்டது என்றுதான் கூற வேண்டும்.

அவ்வாறு தன் இனத்தைக் கொடூரமாக அழிக்கும் இனத்திற்கு எதிராக கிளர்ந்து எழும் போது, அது உள்நாட்டுப் போராகவோ அல்லது உள்நாட்டு பிரச்சனையாகவோ உருவெடுக்கிறது. அம்மாதிரியான சூழலில் சிறுப்பான்மை மற்றும் அதிகாரமற்ற நிலையில் இருக்கும் இனத்திற்கு எதிராக அதிகாரமும் ஆளுமையும் கொண்டிருக்கும் இனம் புரியும் அட்டூழியங்கள் எழுத்துகளில் விவரிக்க முடியாத ஒன்றாக விளங்குகிறது.
யூதர்களுக்கு எதிராக இட்லர் புரிந்த இன அழிப்பு பெரும் அச்சத்தையும் நினைத்துக்கூட பார்க்க முடியாத சம்பவங்களாகவும் இன்றைக்கும் நினைவுக்கூறுகிறோம். நாஜிக்களால் யூதர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புதான் கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த இன அழிப்பு என நம்மில பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், உண்மையில் அதற்கு முன்னதாகவே, அதாவது 1915-க்கும் 1920-க்கும் இடையில், சத்தமே இல்லாமல் துருக்கியில் ஓட்டோமான் இனத்தால் ஆர்மீனியர்கள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து ருவாண்டாவில் இலட்ச ஹூடு இனத்தவர்கள் கொல்லப்பட்டதும் கூட இன அழிப்புதான்.

அதுமட்டுமின்றி, 1932 தொடங்கி 1933 வரையில் உக்ரையினில் சோவியத் ஒன்றியம் ஏற்படுத்திய செயற்கை பஞ்சம் கூட இன அழிப்புதான் என வகை செய்யப்பட்டிருக்கும் நிலையில், 1975-ல் கிழக்குத் தீமோர் மீது இந்தோனேசியப் படையெடுப்பும் இன அழிப்புதான் என்று வகை செய்யப்பட்டுள்ளது. மியன்மாரில், ரோஹிங்கியா இனத்திற்கு எதிராக அந்நாட்டு அரசாங்கமும் அந்நாட்டின் தேசிய இனமும் புரியும் கொடூரங்களையும் கொடுமைகளையும் இந்த உலகம் இன்னமும் வாய் மூடி பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

இன அழிப்பு என்பது ஓர் இனத்தைப் போரில் கொல்வதிலும் அவர்களை அடித்து துரத்துவதிலும் சித்திரவதை செய்வதிலும் அடங்கி விடவில்லை. மாறாய், அவ்வினத்திற்கு எதிராக உடல் மற்றும் உள ரீதியாக புரியப்படும் கொடூரமான அல்லது கொடுமையான செயல்களும், இனப் படுகொலைதான்.
மேலும், ஓர் இனத்தின் பிறப்பைத் தடுப்பது, வழுக்கட்டாயமாக வேறு இனக் குழுவோடு சேர்ப்பது ஆகியவையும் இன அழிப்புதான் என, 1948-ல் இனப் படுகொலை குறித்த ஐநாவின் தீர்மானத்தில் உள்ளடங்கியுள்ளது. இது 1951 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி இன அழிப்பு என்பது, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சத்தமின்றி அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், உலகத் தமிழர்கள் மத்தியில் ஈழம் மலரும் எனும் பெரும் நம்பிக்கை தொடர்ந்துக் கொண்டிருந்தபோதுதான், அந்தக் கொடூரம் நடந்தேறியது. ஆம், சுமார் 12 ஆண்டுகளை எட்டிவிட்ட நிலையிலும், உலகத் தமிழர்களின் இதயங்களில் இன்னமும் குருதி வடிந்துக்கொண்டிருக்கும் மே 18 இன அழிப்புதான் அது.



 
குலசேகரம்.சதீஷ்