பாகம் 2
இலங்கை அரசு அந்நாட்டில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட இன அழிப்பின் உச்சம் நடந்தேறிய நாள் தான் இந்த மே 18. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில், 2009-ம் ஆண்டில், இனவாத இலங்கை அரசால் இக்கொடூரம் நடத்தப்பட்டது. சுமார் 40,000 பேர் அன்றைய நாளில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களில் விடுதலை புலி உட்பட பெரும்பான்மையோர் அப்பாவி மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களைக் கேடயமாக வைத்து, முன் நகர்வினை மேற்கொண்டு புலிகளைச் சூழ்ச்சியால் வீழ்த்திய சிங்கள இராணுவம் அப்பாவி மக்களையும் கொன்று குவித்து மாபெரும் இன அழிப்பிற்கு வித்திட்டது. காலம் காலமாக தமிழ் மக்கள் ஆடிப்பாடி வாழ்ந்த ஊர் எங்கும், அன்றைய தினத்தில் மரண ஓலங்கள் ஒலித்தது, நிற்காமல் தொடர்ந்தது ஆங்காங்கே அழும் குரல்கள். துப்பாக்கி தோட்டாக்களுக்கும் எறிகுண்டுகளுக்கும் பலியானவர்கள் போக, எஞ்சியவர்கள் சித்தம் இழந்து முள்ளிவாய்க்கால் சூன்யமாகிப் போனது.
போர் நடக்கும் போது பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை, வழிபாடு தலங்கள் உட்பட பொது மக்கள் தஞ்சம் புகும் எவ்விடத்திலும் தாக்குதல் நடத்தக்கூடாது என்பது போர் மரபு. ஆனால், இலங்கையில், உச்சக்கட்ட போரின் போது சிங்கள இராணுவம் உயிரைக் காத்துக்கொள்ள மருத்துவமனையில் தஞ்சம் புகுந்தவர்களையும் விட்டு வைக்காமல் குண்டு மழை பொழிந்து கொன்றது. அவர்களின் நோக்கம், விடுதலை புலிகளை வீழ்த்துவதல்ல. மாறாய், தமிழினம் இருக்கவே கூடாது என்பதற்கு இதுவே தக்க சான்று.
மே 18-ல், முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலை போர் முடிவுக்கு வந்ததாக கூறப்படும் நிலையில் சிங்களப் பௌத்த பேரினவாத அரசாங்கம் சுமார் 15-க்கும் மேற்பட்ட நாடுகளின் உதவியோடு இந்த விடுதலை போரை முடிவுக்கு கொண்டு வந்தது.
போருக்கு ஒரு நியாயமும் மரபும் உள்ளது. வெள்ளைக் கொடியோடு சரணடைய வந்தவர்களைக் கூட கொன்று குவித்து மகிழ்ந்தது சிங்கள இராணுவம். போரில் எந்நிலையிலும் அப்பாவி மக்களைக் கொல்லக்கூடாது என்பது மனித உரிமைச் சட்டமாகும். இந்த மரபையும் மீறி 40,000-க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசிற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் வல்லரசுகளும் ஐநாவும் இத்தனை ஆண்டுகள் கடந்தும் மௌனம் காப்பதுகூட தமிழினத்திற்கு எதிரான ஒன்றானதாகவே சிந்திக்க வேண்டியுள்ளது.
இலங்கை அரசியலில் 1950-களில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் அரசியல், பொருளாதாரம், மொழி, மதம் சார்ந்ததாக அமைந்திருந்த வேளையில், சிங்கள அரசு தனது ஆளுமை மற்றும் அதிகாரத்தைப் பிற இனங்களின் மீது திணிக்கத் தொடங்கியது. இலங்கையின் பெரும்பான்மை இனம், பிற சிறுபான்மையினரை எதிரியாகப் பார்த்தது. அந்நிலையில் தமிழர்கள் பல கட்டங்களில் ஏமாற்றப்பட்டதோடு, தொடர்ந்து உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கவும் பட்டனர். தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு இதுவே முதன்மை காரணியமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குலசேகரம்.சதீஷ்