தமிழினத்தைக் கருவறுத்து, தமிழின அழிப்பைத் தொடர்ந்தும் நடத்திவரும் இனப்படுகொலையாளி கோட்டாபயவின் Scotland – Glasgow வருகைக்கு எதிராக, மாபெரும் கண்டன எதிர்ப்புப் போராட்டம் நாளை ( 01) ஸ்கொட்லாந்தில் நடைபெறவுள்ளது.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில் காலை முதல் மாலை வரை இந்த எதிர்ப்புப் போராட்டம் இடம்பெறவுள்ளது.
இப்போராட்டத்திற்கு தமிழ் மக்கள் அனைவரும் பேரெழுச்சியுடன் அணிதிரண்டு வையகம் அதிர்ந்திட உரத்துக் குரல் கொடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (Seeman) உரிமையுடன் உலகத்தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
என் அன்புக்குரிய சொந்தங்கள், என் அருமை உடன் பிறந்தார்கள் நம்முடைய உள்ள உணர்வை நம் ஆழ்மனதில் கொதித்துக் கிடக்கின்ற, கோப உணர்வை, நமக்குள்ளே இருக்கிற காயத்தை வெளிக்காட்டுவதற்கு இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, கோட்டாபய வரும்பொழுது தமிழ்மக்கள், பெருந்திரளாகத் திரண்டு, பேரெழுச்சியாக அவருக்கு நம்முடைய எதிர்ப்பினை வெளிக்காட்ட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
குறிப்பாக இவ்விவகாரத்தில் அமைப்பு, கட்சி, தூரதேசம், பிரதேசம் உள்ளிட்ட வேறுபாடுகளைக் கூறி பிரிந்து நிற்கக் கூடாது. இங்கே நம் இனத்தின் நலமும் அதன் எதிர்காலமும் தான் முக்கியம்.
அந்தவகையில், நாம் முன்னெடுக்கின்ற போராட்டத்தோடு இணைந்து, அதனைப் பேரெழுச்சியான போராட்டமாக மாற்றி, கோட்டாபய அவர்களுக்கு நம்முடைய எதிர்ப்புணர்வைக் காட்ட வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன் – என்றுள்ளது.
{பதிப்புரிமை IBC தமிழ்}