தமிழீழ விடுதலைக்காக, புலிகளின் போராட்டங்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தனித்துவமாகவே இருந்து வந்தது. பலவேளைகளின் புலிகளின் கைகள் ஓங்கியிருந்தது. புலிகளை வீழ்த்துவது அவ்வளவு எளிய காரியமல்ல என உணர்ந்த சிங்கள இனவாத அரசு, அப்பாவி தமிழ் மக்களைப் பிணை வைத்து பல்வேறு நாடுகளின் உதவியோடு, சூத்திரமாக வீழ்த்தியது. அதர்மமும் அநியாயமும் கொல்லப்பட்டதாக கொக்கரித்தது.
ஆனால், இது நிரந்திரமல்ல. மீண்டும் புலிகள் உயிர்த்தெழுவார்கள், தமிழீழம் உதயமாகும் என உலகத் தமிழர்கள் இன்னமும் நம்பிக்கையோடுதான் இருக்கிறார்கள்.
முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த உச்சக்கட்ட போரின் போது, படுகொலைகளும் பாலியல் வன்கொடுமைகளும் நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டது. அதனை சேனல் 4 எடுத்த வீடியோக்களும் புகைப்படங்களும் உறுதி செய்தன. ஐநாவும் இறுதிக்கட்ட போரின் போது, போர் மரபு மீறப்பட்டிருப்பதாகக் கூறி, அதற்கான நம்பகமான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறியது.
மேலும், அனைத்துலகப் போர் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறியது. ஆனால், இன்று வரை இலங்கை இனவாத அரசுக்கு எதிராக எவ்வித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. சிங்கள இராணுவம் கொடுரமான போர் குற்றங்களைப் புரிந்துள்ளது வெட்ட வெளிச்சமாகியும், பத்து ஆண்டுகளை எட்டிவிட்ட நிலையிலும் எந்தவொரு விசாரணையுமின்றி, சிங்கள இனவாதம் உலா வருவது தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் குழித்தோண்டி புதைக்கப்பட்டு விட்டது என்றுதான் கொதிக்க வேண்டியுள்ளது.
முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த கொடூரங்களை உலகம் அறிந்திருந்தும், தட்டிக்கேட்கவும் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவும் யாரும் முன் வரவில்லை. ஓர் இனத்திற்கு எதிராக புரியப்பட்ட இன அழிப்பிற்கு உலகமே வாய்மூடி கிடப்பது என்னவொரு அவமானம். இலங்கையில் நிகழ்ந்த இன அழிப்பு அராஜகம், கொடுமைக்கு எப்போது நீதி கிடைக்கும் எனும் கேள்வி இன்னமும் உலகத் தமிழர்கள் மத்தியில் எழுந்துகொண்டுதான் இருக்கிறது.
கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி மே 2009 வரை சுமார் 1 இலட்சத்து 50 பேரைச் சிங்கள இனவாதம் படுகொலை செய்து, இன அழிப்பினை செய்துள்ளது. இது எவ்வளவு மோசமான வலி மிகுந்ததாக இருக்கும் என்பதை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.
உறவுகளை இழந்து, உடமைகளை இழந்து, உடல் பாகங்களையும் இழந்து நடைபிணம் போல் உயிரை மட்டும் பிடித்துக் கொண்டு பிற நாடுகளில் நாடோடிகளாகவும் சொந்த நாட்டில் அகதிகளாகவும் வாழும் தமிழர்களுக்கு இந்த உலகத்தின் மனிதாபிமானம் தான் என்ன? பாதிக்கப்பட்டவன் தமிழன் தானே என அலட்சியம் தொடர்ந்தால் மீண்டுமொரு விடுதலை போர் கிளர்ந்தெழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனலாம்.


குலசேகரம்.சதீஷ்